தமிழில் பிறமொழி கலப்பும் தமிழ் மொழியின் தனித்துவமும் – ஒரு மொழியியல் பார்வை

மொழி என்பது என்ன?
“மொழி என்பது வெறும் எழுத்தும் சொற்களும் அல்ல. அது ஒரு இனத்தின் வாழ்வியல், வரலாறு, கலாசாரம், சமூகம் ஆகிய அனைத்தையும் தாங்கி காலத்தை தாண்டி உயிருடன் வாழும் ஓர் அடையாளம். அந்த வகையில், உலகில் நிலைத்திருக்கும் ஒவ்வொரு மொழியும் பிறமொழிகளின் தாக்கத்தால் ஒரு அளவிற்கு மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இது இயற்கையான வளர்ச்சி என மொழியாளர்கள் கருதுகின்றனர்.

முன்பு பார்த்த கட்டுரையில், மொழிகளின் வளர்ச்சி மற்றும் காலத்தை தாண்டி வாழும் மொழிகளின் பட்டியலைப் பார்த்தோம். பின்னர், நம் தமிழ் மொழியின் சிறப்பும், அதன் வேறுபாடும் பற்றியும் அறிந்தோம்.

இந்தக் கட்டுரையில், தமிழில் கலந்த பிறமொழி கலப்பையும், தமிழ் மொழி பிற மொழி கலப்பில்லாமல் தனித்து இயங்கியுள்ளதா என்பதையும் காணப்போகிறோம். அதேபோல், பிறமொழி கலப்பு எவ்வாறு நிகழ்கிறது? “தனித்து இயங்கும் மொழி” என்றால் என்ன? என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.


மொழி கலப்பு என்றால் என்ன?
முதலில் மொழி கலப்பு என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். மொழி கலப்பு என்பது, ஒரு மொழியில் வேறொரு மொழியின் தாக்கம் ஏற்படுவது, மற்றும் சில சொற்கள் நிலைமொழியிலிருந்து மாறுபட்டு, வரப்பட்ட மற்றொரு மொழியிலிருந்து எடுக்கப்படுவதை குறிக்கும்.

இவ்வாறாக பல மொழிகள் காலப்போக்கில் தமிழில் கலந்து விட்டுள்ளன. இதுவே “மொழி கலப்பு” எனப்படும்.

தமிழில் இதுவரை கலந்து இருக்கும் மொழிகளின் எண்ணிக்கையை துல்லியமாகக் கணக்கிட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் 10 முதல் 15 முக்கியமான மொழிகளில் இருந்து சொற்கள் தமிழ் மொழியில் கலந்துள்ளன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள், பிறமொழிகளில் இருந்து தமிழ்ச் சொற்பொழிவில் புகுந்துள்ளன.


பிறமொழி கலப்பு எவ்வாறு நிகழ்கிறது?
அதற்கான முக்கிய காரணங்கள்:

• அயல் நாடுகளுடன் நடந்த வணிகம்
• மத மாறுபாடுகள்
• இனக் கலப்பு
• அரசியல் மாற்றங்கள்

இவை மூலமாகவே பிறமொழிகளின் சொற்கள், ஒரு மொழிக்குள் புகுந்து, காலப்போக்கில் அதே மொழியில் நிலைத்துவிடுகின்றன. இதனால், அந்த மொழியின் இலக்கண மற்றும் இலக்கிய அமைப்பில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் பொருள் மாற்றமின்றி, சொற்களில் மட்டுமே நிகழும்.

இது இருப்பினும், நிலைமொழியில் உள்ள இயல்பான தன்மை மாறாது. இதுபோன்ற கலப்புத்தன்மை, உலகின் பல மொழிகளில் பல நூற்றாண்டுகளாக இடம்பெற்று வருகிறது.


தமிழில் கலந்த பிறமொழிகள்
தமிழில் கலந்திருக்கக் கூடிய முக்கியமான மொழிகள்:

• சமஸ்கிருதம்
• பாலி
• பிராகிருதம்
• பரஸிய மொழி
• அரபு
• போர்த்துகீசியம்
• ஆங்கிலம்
• சிங்களம்
• தெலுங்கு
• கன்னடம்
• மலையாளம்

இவற்றின் மூலம் 2000க்கும் மேற்பட்ட சொற்கள் தமிழில் வந்துள்ளன எனக் கருதப்படுகிறது.


மொழியின் வளமை – அதன் அடையாளம்
ஒரு மொழி காலத்தை தாண்டி எவ்வாறு வாழ்கிறதென்பது, அந்த மொழியின் வளமை மீது தான் அமைகிறது. அதில் பிறமொழிகள் கலந்து விட்டாலும், அதன் சொந்த வளமையின் காரணமாக பெரிதாக பாதிக்கப்படாமல் நிலைமொழியாகவே தொடரும்.

ஒரு மொழியின் வளமை என்பது அதற்கே உரிய:

❖ தனித்துவமான இலக்கணம்
❖ எழுத்து வடிவம்
❖ ஒலி, உச்சரிப்பு

இவற்றில் அடங்கியுள்ளது. தமிழும் அவ்வாறு தான்.

தமிழுக்கு:
❖ தனி மொழியாய் அமையும் ஒலி
❖ உச்சரிப்பு
❖ எழுத்து வரி வடிவம்
❖ இலக்கணம்
❖ இலக்கியம் ஆகியவை உள்ளன.

இவை அனைத்தும் சேர்ந்து, தமிழ் மொழியை செழுமையான, வளமான, வரலாற்றையும் தாண்டி உயிருடன் வாழும் மொழியாக ஆக்கியுள்ளன.

சென்ற கட்டுரையில் தமிழின் எழுத்து தனித்துவம் மற்றும் தமிழ் பிறமொழிகளில் இருந்து எழுத்து வடிவங்களை கடன் வாங்கவில்லை என்பதையும் பார்த்தோம். இப்பொழுது, தமிழ் “தணிச்சை” ஆக செயல்படும் திறன் கொண்டது என்பதை காணலாம்.


மொழிக்கு எழுத்தும், உச்சரிப்புக்கும் பிறகு மிக முக்கியமானது அதன் இலக்கணம்.
இலக்கணம் என்றால் என்ன?

ஒரு மொழியில்:

❖ எழுதப்படும் எழுத்துக்கள் பிறக்கும் இடம்
❖ அதற்கான ஓசை, அளவு, மாத்திரை
❖ அது இடம்பெற வேண்டிய இடம்
❖ புணர்ச்சி
❖ காலம்
❖ பால் பிரிவு

போன்றவை அனைத்தும் இலக்கணத்தின் பகுதிகள் ஆகும்.

இலக்கணம் உள்ள மொழியே, எழுத்து வடிவில் இலக்கியத்தை உருவாக்கும் திறன் உடையது.


தமிழின் இலக்கணம் மிகத் தொன்மையானது. தமிழில் இப்போது கிடைக்கின்ற மிகப் பழமையான இலக்கண நூல் – தொல்காப்பியம்.

ஆனால், தொல்காப்பியத்திற்கு முன்பே இலக்கணங்கள் இருந்ததையும்,
தொல்காப்பியர் தமது நூலில் “இது முன் இருந்த புலவர்களின் கருத்தின் படியே அமைந்தது” எனக் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியரின் காலம் கிமு 2ம் நூற்றாண்டு எனச் சொல்லப்படுகிறது. எனவே, தமிழில் இலக்கணம் அதற்கும் முந்தையதாகவே இருந்திருக்க வேண்டும்.


இவ்வாறு செழுமையும் வளமையும் கொண்ட தமிழில் பிறமொழி கலப்பின்றியே இயங்க முடியுமா?
முடியும் என்று நம் பதிலாகச் சொல்லலாம். ஏனென்றால் தமிழுக்கு தனி குணம் உண்டு. அதற்கான அனைத்தையும் தமிழே தன்னுள் வைத்துள்ளது.

“நம்மிடம் இல்லாத ஒரு பொருளை தான் பிறரிடம் இருந்து நாம் எப்போதும் வாங்குகிறோம்.
நம்மிடம் இருக்கும் பொருளை சில சமயம் பிறருக்கு நாமே தருகிறோம்.”

அதேபோல், தமிழும் தன்னிடம் உள்ள சொற்களை பிறமொழிக்கு தந்தாலும்,
பிறமொழிகளில் இருந்து காலத்தின் கட்டாயத்தில் வந்த சொற்களை தன்னுள் வைத்துக்கொண்டாலும்,
அதில் தனிச்சிறப்பு மாறாமல், இன்றும் தனித்துவம் பெற்று நிலைத்திருக்கிறது.

தமிழில் முதல் முக்கிய மொழிக் கலப்பாக கருதப்படும் சமஸ்கிருதம்
தமிழ்மொழியின் மிகப் பழமையான மொழிக் கலப்பாக கருதப்படுவது வடசொல், அதாவது சமஸ்கிருத மொழி ஆகும்.

சமஸ்கிருதம் என்பது வட திசையில் இருந்து வந்த ஒரு புலம்பெயர்ந்த மொழி என்று அறியப்படுகிறது. இப்போது வட இந்தியா எனக் கருதப்படும் பகுதிகள் அல்லாது, ஆரியர்கள் எனப்படும் ஒரு இனக்குழுவினர் கிமு 1500–1200 இடையே மத்திய ஆசியா மற்றும் இந்நாள் ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்தனர் என்று ஒரு முக்கியமான மொழியியல் கோட்பாடு கூறுகிறது.

அவர்கள் கொண்டு வந்த மொழி தான் வேத சமஸ்கிருதம் ஆகும்.
இது ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், அத்தர்வவேதம் போன்ற வேத நூல்களில் பயன்படுத்தப்பட்டதாகும்.

அதன்படி, சமஸ்கிருதம் என்பது ஒரு 'இரக்கம் பெற்ற' (அபைசயவெ) மொழி என்றும், பிறபக்கம் வந்த ஒரு மொழி என்றும் கருதப்படுகிறது.


“வடசொல்" என்றால் சமஸ்கிருதமா?
சிலர் கூறுவதுபோல், தொல்காப்பியம் சொற்களை நான்கு வகைகளாகப் பிரிக்கிறது:

  1. இயற்சொல்

  2. திரிச்சொல்

  3. திசைச்சொல்

  4. வடசொல்

இதில் “வடசொல்” என்பதைக் சிலர் சமஸ்கிருத சொற்களாக கருதுகின்றனர்.
ஆனாலும், “வடசொல் என்பது சமஸ்கிருதம் அல்ல, மாறாக வேத சமய மொழிகள் அல்லது பண்டைய பிராகிருத வடமொழிகளை குறிக்கிறது” என்பதே மற்றொரு நிலைபாடு.


தொல்காப்பியர் “சமஸ்கிருதம்” என்ற சொல்லை எங்கும் குறிப்பிடவில்லை.
மேலும், சமஸ்கிருதம் பாணினி இலக்கணத்துக்குப் பிறகு மட்டுமே நிலைபெற்றது.
அதாவது, தொல்காப்பியக் காலத்தில் அது பரவவில்லை என்பது உண்மை.
எனவே, “வடசொல்” என்பது பண்டைய வடமொழிச் சொற்கள் என்பதே நியாயமான உண்மை.


“முகம்”, “நகம்” – தமிழ் சொற்களா? சமஸ்கிருத சொற்களா?

இச் சொற்கள் தமிழில் தொல்காப்பிய காலத்திலிருந்தே இயல்பாகவே பயன்பட்டுள்ளன. மேலும், இவை மிகப் பழமையான திராவிட மொழிகளிலும் காணப்படும் இயல்பான சொற்களாக இருக்கின்றன.

சமஸ்கிருதத்தில் முக:, நக: போன்ற சொற்கள் இருப்பினும், ஒலி மற்றும் பொருளைப் பொறுத்தவரை பல மொழிகளில் ஒரே மாதிரியாக உருவாகும் இயல்பு உள்ளது.

அதனால், இச் சொற்களை தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு எடுக்கப்பட்டவையா அல்லது சமஸ்கிருத வேர்ச்சொற்களா என்பது தெளிவாக முடியாது.

தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் உள்ள ஒத்த சொற்கள் எடுத்துக்காட்டு:



கவனிக்க:
இவை எல்லாம் பரஸ்பர மொழிப் பரிமாற்றம் மூலமாகவோ, ஒரே வேர்ச்சியிலிருந்து இல்லாமலோ உருவாகியிருக்கலாம்.
ஒத்த ஒலி இருந்தாலே கடனெடுத்த சொல் என நிரூபிக்க முடியாது.
இதற்கான நிரூபணமாக வரலாற்று காலம், இலக்கண நூல்கள், கல்வெட்டு ஆதாரங்கள் ஆகியவை அவசியம்.

தீர்மானம்

தமிழ் ஒரு தொன்மையான, தன்னிறைவு பெற்ற, தனிச்சை மொழி ஆகும்.
பிறமொழிகளில் இருந்து சில சொற்கள் புகுந்துள்ளன என்றாலும்,
தமிழின் அடையாளமான எழுத்து, இலக்கணம், இலக்கியம் ஆகியவை
அதன் பிறப்புக் காலத்திலிருந்தே மாறாமல் நிலைத்திருக்கின்றன.

“முகம்”, “நகம்” போன்ற சொற்கள் தமிழ் சொற்களே என்று
பல மொழியியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மொழி வளர்ச்சி என்பது “கடன்” அல்ல, “பரிமாற்றம்”!
ஆனாலும், தமிழ் பிறமொழிகளில் இருந்து சொற்களை ஏற்றுக் கொண்டாலும்,
அதனுடைய தன்மையும் தனித்துவமும் எப்போதும் காத்திருக்கின்றன.

எனவே, தமிழ் என்பது தனித்துவமாக இயங்கக்கூடிய ஒரு மொழி.
பிறமொழிக் கலப்புகள் இருந்தாலும், அவற்றைத்
தமிழ் மொழியிலிருந்து பிரித்தெடுத்த பிறகும்,
தமிழ் தனது தனித்துவத்தை இழக்காமல் திகழ்கிறது.


Popular posts from this blog

தமிழ் தொல்லியல் புனைவுகள்: எழுத்து மரபும் தொன்மையும்